அசாமில் 18 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு
அசாம் மாநில மருத்துவமனை ஒன்றில் அடுத்தடுத்து 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநில ஜோர்கட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9 நாட்களில் மட்டும் 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பிறந்து ஓரிரு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் ஆவார்கள். பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மருத்துவ துறையின் இயக்குநர் தலைமையில் விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ஜோர்கட் மருத்துவமனையின் முதல்வர், பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளார். அத்துடன் மருத்துவமனை உள்ளேயே விசாரணைக்கு உத்தரவிட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளர். அதில் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் வைக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 10 குழந்தைகள் பிறக்கும்போதே குறைவான எடையுடன் பிறந்ததே உயிரிழப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மற்ற மூன்ற குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அம்மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் வெறும் 40 குழந்தைகளை வைக்கக் கூடிய அளவில் இடங்களே உள்ளன. அதேசமயம் கடந்த நவம்பர் 1 முதல் 6-ஆம் தேதி வரை பல குழந்தைகள் ஒரு பெட்டில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட குழந்தைகள் உயிரிழந்ததோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.