ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை: ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்

ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை: ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்
ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை: ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில், சுமார் ஏழரை லட்சம் ஏ.கே.203 துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
அரசுமுறைப் பயணமாக டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்தியா - ரஷ்யா இடையிலான ராணுவ உறவை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் இந்த சந்திப்பின்போது இடம்பெறவிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கியை வாங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட எஸ்-400 ரக வான் பாதுகாப்பு தொகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெறவுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏ.கே. 203 ரக துப்பாக்கிகள் கொள்முதல்
இந்தியாவின் ஆத்மநிர்பார் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ரஷ்ய தயாரிப்பான ஏ.கே.203 ரக துப்பாக்கியை வாங்க ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் இறுதியாகியிருப்பது, இந்திய ராணுவத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.கே. 203 ரக துப்பாக்கியை வாங்குவதன் மூலம், இந்திய ராணுவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் இந்திய சிறு ஆயுதங்கள் தொகுப்பு விடைபெறவுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கவுள்ள ஏ.கே.203 ரக துப்பாக்கி வாயு மூலம் இயங்கக்கூடியது. முந்தைய கேட்ரிட்ஜை விட, அதாவது துப்பாக்கி தோட்டாக்களில் இருக்கும் வெடி மருந்துகள் இதில் அதிகமாக இருக்கும். ஏ.கே. 203 ரக துப்பாக்கி ஆரம்பத்தில் ஏ.கே.103எம் என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் அதனை ரஷ்ய விஞ்ஞானி மிக்கெயில் கலாஷ்நிக்கோவ் மேம்படுத்தினார். ஆயுத வல்லுநர்களை பொறுத்தவரை ரஷ்யாவின் இந்த தயாரிப்பு மிகவும் நம்பகமானது. நீடித்து நிலைக்க கூடியது. பராமரிப்பதும் எளிதானது. அதன் வடிவமைப்பு, தோட்டா பாயும் திறன், துல்லியம் என அனைத்திலும் சிறப்பானதாக இருப்பதாகவும் புகழ்கிறார்கள் ஆயுத வல்லுநர்கள்.
இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே ஏ.கே.203 ரக துப்பாக்கியை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், அதிகப்படியான விலை, தொழில்நுட்பத்தை பங்கீட்டுக் கொள்வதில் நீடித்த சிக்கல் ஆகியவற்றால், பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எனினும் நீண்ட இழுபறிக்குப் பின், இந்த ஒப்பந்தம் இந்தியா - ரஷ்யா இடையே இறுதியாகியுள்ளது. ஒப்பந்தத்தின்படி முதல் 20 ஆயிரம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக இறக்குமதியாகும். இந்திய மதிப்பில் ஒரு துப்பாக்கி 80 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இந்த இறக்குமதி நடக்கிறது.
அதன் பின் அதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிடம், ரஷ்யா பகிர்ந்து கொள்கிறது. அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில், இதற்கான தொழிற்சாலை நிறுவப்பட்டு, இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பில் தொடங்குகிறது ஏ.கே.203 ரக துப்பாக்கி உற்பத்தி.
தற்போது இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் இன்சாஸ் துப்பாக்கி ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் மேம்படுத்தப்பட்டு, கடந்த 1990களில் படைகளில் சேர்க்கப்பட்டது. ஏ.கே.47 ரக துப்பாக்கிக்கு ஒப்பானதாக இதை சொல்கிறார்கள். கார்கில் போரின்போது கூட இந்த துப்பாக்கியை தான் ராணுவ வீரர்கள் பயன்படுத்தினார்கள். எனினும், போருக்குப் பின், இன்சாஸ் துப்பாக்கியின் செயல்பாடு அந்த அளவுக்கு திருப்தியாக இல்லை என்ற புகாரை எழுப்பியிருந்தன இந்திய துருப்புகள்.
குறிப்பாக குளிர்காலங்களில் எதிரிகளை எளிதில் சுட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறிய ரக தோட்டா என்பதால், எதிரியை சுட்டு வீழ்த்துவதற்கு பதிலாக காயத்தை மட்டுமே ஏற்படுத்த முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே, சிறந்த துப்பாக்கிக்கான தேடல் தொடங்கி, தற்போது ஏ.கே.203 ரக துப்பாக்கியை கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்தது.
இந்த துப்பாக்கி இன்சாஸை விட, எடை குறைவானது. இந்தியாவின் இன்சாஸ் துப்பாக்கியில் நிமிடத்திற்கு 650 தோட்டாக்கள் வெடித்துச் சிதறம், ரஷ்ய துப்பாக்கியில் நிமிடத்திற்கு 600 தோட்டாக்கள் மட்டுமே சீறிப் பாயும். எனினும், தோட்டா துல்லியமாக எதிரியின் உடலை பதம் பார்க்கும் என்றும், இந்திய தோட்டாவின் அளவை விட சற்று பெரியது என்றும் தெரிவிக்கிறார் அதை தயாரித்த கலாஷ்நிக்கோவ். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com