பெட்ரோல் போட போறீங்களா..? வருகிறது பிரதமரின் அறிவிப்பு..!
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் உலகின் முன்னணி எண்ணெய் நிறுவன உயரதிகாரிகள் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் அதிகம் சிரமப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த 4-ஆம் தேதி மத்திய அரசு லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைத்தது. அதேபோல பெட்ரோல், டீசல் மீதான விலை மேலும் குறையும் வகையில் எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ஒரு ரூபாயை விட்டுத்தர முன்வந்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைந்தன. ஆனால் விலை குறைக்கப்பட்டு 10 நாட்கள் ஆவதற்குள் மீண்டும் தினசரி படிப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டுவருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் உலகின் முன்னணி எண்ணெய் நிறுவன உயரதிகாரிகள் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் எண்ணெய் தேவையை சமாளிக்கும் வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
எண்ணெய் துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது, முதலீடுகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவது, ஆழ்கடலில் எண்ணெய் வள ஆய்வு போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சவுதி எண்ணெய் வள அமைச்சர் காலித் அல் ஃபாலி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.