அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. - காரணம் என்ன?
புதிய மனுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக நவம்பர் 2ஆம் நாள் விசாரணைக்கு வர வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
வழக்கு பின்னணி:
டெல்லியில் ஆம்ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையின் அடிப்படையில் மதுபான விற்பனை உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதில் பலகோடி ரூபாய் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்திய பின் (கடந்த பிப்ரவரி மாதம்) அவரைக் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார். மணீஷ் சிசோடியா பிணை கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், டெல்லி முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.