“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அனைவரும் அவர்களது ஒருமாத சம்பளத்தை கேரளாவுக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கன மழையால் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பாதிப்புகளை சந்தித்து வரும் கேரள மாநிலத்திற்கு பல அண்டை மாநிலங்களும் உதவி வருகின்றன. இந்நிலையில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், குஜராத், பீகார், ஒடிசா, பாஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் பாண்டிசேரி ஆகிய மாநிலங்கள் அவரவர் அரசு சார்பில் நிதியுதவி அறிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அனைவரும் அவர்களது ஒரு மாத சம்பளத்தை கேரளாவுக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.