பஞ்சாப் மக்களுக்கு வேலைவாய்ப்பில் 80% இடஒதுக்கீடு.. அர்விந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் உள்ளூர் தொழில்துறையில் பஞ்சாப் மக்களுக்கு 80 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆட்சியை பிடிக்கும் பொருட்டு ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள மாஜ்ஹா பிராந்தியத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், உள்ளூர் தொழில்துறையில் பஞ்சாப் மக்களுக்கு 80 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்தார். ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து, யார் முதலமைச்சராக தேர்வானாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தங்களது கடமை எனவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப்பில் போதைப்பொருட்கள் ஒழிக்கப்படும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும், ஒவ்வொரு பஞ்சாப் மக்களும் கண்ணியத்துடன் வாழ வழி செய்யப்படும் எனவும் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.