வாடகை வீட்டினருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வாடகைக்கு குடியிருப்போருக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரையிலான மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு 50 சதவீத மானியத்துடன் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆனால், வாடகை வீட்டில் இருப்பவர்கள் டெல்லி அரசின் அந்த மின்சார மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் 200 யூனிட் வரை இலவசம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 200 யூனிட்டுக்கு மேல் வரும் மின்சாரத்திற்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும். இதற்காக வாடகைக்கு குடியிருப்போர் ரூ3000 செலுத்தி பிரீபெய்ட் மீட்டர்களை பொருத்த வேண்டும். இந்த பிரிபெய்டு மீட்டர் பொருத்த வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீது ஆகியவை தேவை. வீட்டு உரிமையாளரிடம் இருந்து அனுமதி சான்றிதழ் எதுவும் பெற்று வரத்தேவையில்லை.
இந்த இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பாக டெல்லி அரசுக்கு ஆண்டு தோறும் ரூ1800-2000 கோடி இழப்பு ஏற்படும். டெல்லியில் தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், கெஜ்ரிவால் அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.