டெல்லியில் கொரோனாவால் மரணமடைந்த குடும்பத்திற்கு ரூ.50000 நிவாரண நிதி - கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50000 நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இதுவரை 22,111 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் வீட்டில் வருமானம் ஈட்டுபவர் கொரோனாவால் இறந்தால் மாதம் 2500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவை டெல்லி அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே சைக்கிள் ரிக்ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொதுமுடக்க காலத்தில் மாதம் ரூ.5000 வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.