''பப்ஜியை தடை செய்யலாமா?'' - கருத்துகளைக் கேட்கும் அருணாச்சல பிரதேச அரசு
பப்ஜியை தடை செய்யலாமா என பல்வேறு தரப்பினரிடமும் அருணாச்சல பிரதேச அரசு கருத்துகளை கேட்டுள்ளது
ஆன்லைன் விளையாட்டு வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் மன ரீதியாகவும் அவர்களை பாதிக்கிறது. விளையாடுபவர்களை அடிமைப்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் விளையாட்டுகளால் பிரச்னை உருவாகிறது. இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் பல அரசுகள் முக்கிய பிரச்னையாகவே கவனம் செலுத்தி வருகின்றன.
குறிப்பாக பலரும் அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய பல நாட்டு அரசுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவில் பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன. நேபாளம். ஈராக் நாடுகள் பப்ஜி விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் அருணாச்சல பிரதேச மாநில அரசும் பப்ஜி விளையாட்டை தடை செய்யும் முனைப்பில் உள்ளது. பெற்றோர்களின் தொடர் புகாரை அடுத்து பல்வேறு தரப்பினரிடமும் பப்ஜியை தடை செய்யலாமா என கருத்துகளை கேட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாநில தொழில் நுட்பத்துறையிடமும் ஆலோசனை கேட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டு என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்ற தகவல்களை சேகரித்தப்பின் ஆன்லைன் விளையாட்டை தடை செய்யலாமா அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அருணாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.