அருணாச்சலில் வன்முறை - துணை முதலமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்
அருணாச்சலப் பிரதேச தலைநகரில் நிகழ்ந்த வன்முறையில் துணை முதலமைச்சரின் வீடு சூறையாடப்பட்டது.
அருணாச்சல பிரசேதத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினர் அல்லாத 6 சமூகத்தினருக்கு நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக் கூறப்படும் நிலையில், தலைநகர் இடாநகரில் ஏராளமானோர் திரண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், துணை ஆணையர் அலுவலகமும் சூறையாடப்பட்டது. துணை முதலமைச்சர் சவ்னாமெயின் இல்லத்தின் வாயில் கதவு பூட்டை கல்லைக் கொண்டு உடைத்த வன்முறையாளர்கள், வீட்டை சேதப்படுத்தினர். பதற்றமான சூழல் நிலவுவதால் வதந்திகள் பரவுவதை தடுக்க இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.