விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை - அருண் ஜேட்லி
விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசு சொல்வதற்கு எதுவுமில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய தேவையான நிதியை மாநில அரசுகள்தான் உருவாக்க வேண்டும். மத்திய அரசின் சார்பில் அதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. மகாராஷ்டிரா போன்று விவசாயக் கடன் தள்ளுபடி செய்தே ஆக வேண்டும் என்கிற மாநிலங்கள் மாநில அரசின் நிதி ஆதாரத்தைப் பெருக்கி அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றார்.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு, 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள 1.07 கோடி விவசாயிகளின் ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவராஜ்சிங் சவுகான், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவாதம் கொடுக்கவில்லை என்றாலும், விவசாயிகளுக்கான புதிய சலுகைகளை அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான புதிய திட்டத்தை வகுத்து வருவதாகவும், அத்திட்டத்திற்கு ரூ.36 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத வறட்சியின் காரணமாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி, விளை பொருளுக்கு உரிய விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். மகாராஷ்டிராவில் 5 லட்சம் விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் காரணமாகவும், மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறி 5 விவசாயிகள் சுட்டுக் கொள்ளப் பட்டதன் விளைவாகவும் அம்மாநில அரசுகள் நேற்று (ஞாயிறு) இந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.