பெங்களூரு சாலையில் விண்வெளி வீரரின் பயணம் - எதற்காக தெரியுமா?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி. இவர் விண்வெளி வீரர் போல் ஆடை அணிந்தபடி சாலையில் நடந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடியது அந்த வீடியோ.
அந்த வீடியோவில் தொடக்கத்தில் விண்வெளி வீரர் ஒருவர் வேற்றுக் கிரகத்தில் மெல்ல மெல்ல அடி வைத்து நடப்பதுபோல் வரும். கொஞ்ச நேரம் செல்ல அது பூமியில் உள்ள சாலையைப் போல் இருக்கும். இறுதியில்தான், குண்டும் குழியுமாக உள்ள சாலையில் வாகனங்களுக்கு நடுவே ஒருவர் விண்வெளி வீரரின் ஆடை அணிந்தபடி நடந்து செல்வது தெரிய வரும்.
அதாவது, பெங்களூரில் உள்ள சாலைகளின் நிலைமையை எடுத்துக் கூற ஓவியர் பாதல் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரையும் அது சிரிக்கவும், பிரச்னையை உணரவும் வைத்துள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து பாதல் நஞ்சுண்டசுவாமி ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், “நகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமாக உள்ளன. ஒரு பெங்களூரு நகரவாசியாக நாங்கள் நிறைய பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சாலைகளில் உள்ள இந்த பள்ளங்கள் விபத்துக்கு வழிவகுக்கிறது. அதனால்தான் இந்த பிரச்னையை எல்லோர் கவனத்துக்கும் கொண்டு வர நினைத்தேன்” என்றார்.
இதற்கு முன்பாகவும் ஓவியர் பாதல் பல்வேறு பிரச்னைகளுக்கு இதேபோல் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவரது குரலுக்கு மதிப்பு கொடுத்து அரசும் சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறிய போது, “இதற்கு முன்பு, சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து ஓவியம் வரைந்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். என்னுடைய அனுபவம் இதுவரை வெற்றிகரமாக இருந்துள்ளது” என்றார்.