கூடுதல் லக்கேஜ்.. விமான ஊழியர்களைப் புரட்டியெடுத்த ராணுவ ஊழியர்!
விமானங்களில் சமீபகாலமாகப் பிரச்னைகளும் மோதல்களும் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அது விமான நிலையம் வரை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த, ஜூலை 26ஆம் தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வழக்கமான விமானப் போக்குவரத்து நடைமுறைபடி, பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, டெல்லி செல்லும் SG-386 விமானத்தின் ஏறும் வாயிலில், மூத்த ராணுவ அதிகாரி ஒருவருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகப்படியான லக்கேஜ் கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் வன்முறையில் முடிந்தது.
இதன் காரணமாக அந்த ராணுவ வீரர் நான்கு பேரைச் சரமாரியாக தாக்கினார். ராணுவ வீரர், விமான நிறுவன ஊழியர்களை விரட்டிவிரட்டி தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பயணியை பறக்கத் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கக் கோரியும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டி.ஜி.சி.ஏவுக்கு விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது. அதேபோல், ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோவிற்கு பதிலளித்த சிஐஎஸ்எஃப், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது.
இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்பைஸ்ஜெட் விமானம் SG-386இல் ஏறும்போது, சாமான்கள் தொடர்பான பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்தது. CISF பணியாளர்கள் உடனடியாக தலையிட்டு, நிலைமையை சமாளித்து, விமான நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். மேலும், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது விமானப் பாதுகாப்பு விதிமுறைகளின் கடுமையான மீறலாகும். இதில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர் ஒருவர் தரையில் மயக்கமடைந்து விழுந்தார். ஆனால் பயணி மயக்கமடைந்த ஊழியரை தொடர்ந்து உதைத்துத் தாக்கினார். மயக்கமடைந்த சக ஊழியருக்கு உதவ குனிந்தபோது தாடையில் பலமாக உதைக்கப்பட்டதால் மற்றொரு ஊழியருக்கு மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் கசிந்தது. காயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) விதிகளின்படி, இந்த சம்பவம் நிலை 2 (உடல் ரீதியான துஷ்பிரயேகம்) மற்றும் நிலை 3 (உயிருக்கு ஆபத்தான நடத்தை) ஆகியவற்றின்கீழ் வருகிறது. இதன் விளைவாக ஆறு மாதங்கள் வரை (நிலை 2 என்றால்) மற்றும் வரம்பற்ற இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் (நிலை 3 என்றால்) பறப்பதில் இருந்து தடை விதிக்கப்படும்.