3 ஆண்டுகளில் 35 போர் விமானங்கள், 14 பைலட்டுகளை இழந்த பாதுகாப்புப் படை!
இந்திய பாதுகாப்புப்படையில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 35 போர் விமானங்கள் விபத்தை சந்தித்துள்ளன. 14 பைலட்டுகள் விபத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புப்படையில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற விமான விபத்துக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை முப்படைகளில், 35 விமானங்கள் விபத்தை சந்தித்துள்ளன. இதில் 14 பைலட்டுகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 70 விமானங்களும், 80 வீரர்களும் விமான விபத்துக்களால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இதற்கு விளக்கமளித்து பேசிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சுபாஷ் ராம்ராவ், விமான விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விபத்துகளின் காரணம் மற்றும் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு விபத்துக்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் பெரும்பாலான விபத்துக்கள் தொழில்நுட்பக்கோளாறுகள் மற்றும் கவனக்குறைவால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.