கன்னட நடிகை பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் அர்ஜூனுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அவர் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார்.
‘விஸ்மய’ என்ற கன்னட படப்பிடிப்பின்போது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் அர்ஜூன் மீது அப்படத்தின் நாயகி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் இதுகுறித்து பெங்களூர் கப்பன்பார்க் போலிசாரிடம் அந்த கன்னட நடிகை அர்ஜுன் மீது புகார் அளித்தார். இதையடுத்து அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, கன்னட நடிகை சாட்சிதாரராக குறிப்பிட்டதன்பேரில், உதவியாளர் கிரண், படத்தின் பெண் இயக்குனர் மோனிகா, பாலியல் புகாரை முன் வைத்த நடிகையின் தோழி யசஸ்வினி, படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர் உமேஷ் ஆகியோர் கப்பன்பார்க் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதனிடையே வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகர் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அர்ஜூன் கைதுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், கன்னட நடிகை புகார் குறித்து விசாரணைக்கு வருமாறு நடிகர் அர்ஜூனுக்கு போலீஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பேரில் இன்று நடிகர் அர்ஜூன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.