”அரிக்கொம்பன் எங்க இருந்தா உங்களுக்கு என்ன?”-நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு அபராதம்

அரிக்கொம்பன் யானை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரிக்கொம்பன் யானை, உச்ச நீதிமன்றம்
அரிக்கொம்பன் யானை, உச்ச நீதிமன்றம்file image
Published on

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் என்கிற காட்டு யானை, தமிழக வனப்பகுதி வழியாக தேனி பகுதிக்குள் நுழைந்தது. அங்கு அரிக்கொம்பன் அட்டகாசம் செய்தும் மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியான நிலையில், அதை, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி, சின்ன ஓவலாபுரம் பகுதியை ஒட்டியுள்ள வனத்தில் அரிக்கொம்பனுக்கு கால்நடை மருத்துவக்குழுவின் ஆலோசனையின்படி இரண்டு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

அரிக்கொம்பன்
அரிக்கொம்பன்

தொடர்ந்து பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, ஊட்டி முதுமலையில் இருந்து உதயன் ஆகிய கும்கிகள் வரழைக்கப்பட்டு, அரிக்கொம்பன் லாரியில் ஏற்றப்பட்டு, நெல்லை மாவட்டம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோதையாறு அணைப் பகுதியில் கொண்டுபோய் விடுவித்ததாகச் செய்திகள் வெளியாகின. அரிக்கொம்பனை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது எங்குள்ளது, எந்த நிலையில் இருக்கிறது உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும். அரிக்கொம்பன் யானையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் குழு அமைக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

arikomban
arikombanPT Desk

இந்த மனு இன்று (ஜூலை 6) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”அரிக்கொம்பன் யானை தொடர்பான மனுக்களால் தாங்கள் சோர்வடைந்துவிட்டோம். இந்த மனுவை விசாரிக்க முடியாது, தேவைப்பட்டால் கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்லவும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ”குறைந்தபட்சம் அரிக்கொம்பன் யானை எங்கிருக்கிறது, உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்பதையாவது தெரிவிக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ”யானை எங்கிருக்கிறது என்பதை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும், ஒரு வனவிலங்கு எங்கிருக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு என்ன பிரச்னை” எனக் கேள்வியெழுப்பினார்.

அரிசிக்கொம்பன் யானை
அரிசிக்கொம்பன் யானைTwitter

அதற்கு வழக்கறிஞர், ”அரிக்கொம்பன் எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்ததுடன், “தங்களது மனுவை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலேயே இதற்கு வாதிட்டோம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி, ”நீதிமன்றம் கடுமையாக நடந்துகொள்ளாமல், பண்பாக நடப்பதால் அதனை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். நீங்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீதிமன்றத்தை இயக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com