அயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைக்கு முடிவு காண பல ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் தீவிரம் காட்டியது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் சமரசக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். அயோத்தி வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்திருந்த நிலையில் விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. விசாரணையில், இந்து அமைப்புகள் தரப்பில் வாதங்கள் முடிந்து புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோபமடைந்து அந்த புத்தகத்தை கிழித்தார். இதனால் நீதிமன்றத்தில் லேசாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வாதங்கள் 40 நாட்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வாதங்கள் அனைத்து நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.