அகிலேஷ்-மாயாவதி மெகா கூட்டணி - காங்கிரசுக்கு இடமில்லையா?

அகிலேஷ்-மாயாவதி மெகா கூட்டணி - காங்கிரசுக்கு இடமில்லையா?
அகிலேஷ்-மாயாவதி மெகா கூட்டணி - காங்கிரசுக்கு இடமில்லையா?

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், திமுக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் முனைப்பில் உள்ளது. 

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் காங்கிரஸ் உடன் இணைய மற்ற கட்சிகள் திட்டமிட்டு வருகிறது. பிராந்திய கட்சிகளை அரவணைத்து செல்லும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தேசிய அளவிலான கூட்டணி முயற்சிகள் ஒருபுறம் நடக்க, ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய ரீதியான கட்சிகள் மக்களவை தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகளைப் போட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவிற்கும் மாயாவதிக்கும் இடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன. ஆனால், காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்கவே அகிலேஷ் யாதவும் மாயாவதியும் திட்டமிட்டுள்ளதாக சமீபமாக தகவல் உலவி வருகிறது. இருப்பினும், அந்தத் தகவலை இரு கட்சிகளும் உறுதி செய்யவில்லை. கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை என்ற தகவலில் உண்மையில்லை என்று  மாயாவதியின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி அமைத்தும், பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. இதனால், அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடிக்கு மாயாவதி ஆதரவு அளித்தார்.

அந்த இடைத்தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வரின் மக்களவைத் தொகுதிகளிலே பாஜக தோல்வியைத் தழுவியது. அதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்தக் கூட்டணி உறுதி செய்யப்படாமலே இருந்து வந்தது. அதேபோல், சமாஜ்வாடி கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால் மூவரும் சேர்ந்து கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. 

ஆனால், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. கனிசமான தொகுதிகள் வேண்டும் என்பதில் மாயாவதி இறுதிவரை பிடிவாதமாக இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான போது, காங்கிரஸ் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் உதவி தேவைப்படும் நிலை உருவானது. ஏனெனில் பகுஜன் சமாஜ் குறிப்பிடப்படும் அளவிலான வாக்கு சதவீதத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தது.  

இத்தகைய சூழ்நிலையில்தான், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கும் இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தாள் கட்சியும் இந்தக் கூட்டணியில் உள்ளது. மாயாவதியின் பிறந்த நாளான ஜனவரி 15ம் தேதி கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com