கட்டாயப்படுத்தி நேபாளத்திற்கு எதிராக கோஷம்: 6 பேர் கைது
‘கடவுள் ராமர் நேபாள நாட்டில் பிறந்தவர். அவர் ஒரு நேபாளி’ என அண்மையில் சொல்லியிருந்தார் நேபாள நாட்டுப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி.
இதற்கு இந்தியாவில் மத வழிப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உத்தரபிரதேசத்தில் நேபாளத்திற்கு எதிராக ஒரு நபரை கோஷம் போடச் சொல்லி, அவருக்கு மொட்டை அடித்து, உச்சந்தலையில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதி அதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக ஆறு பேரை வாரணாசி போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு அமித் பதக் தெரிவித்தது “அருண் பதக் என்பவர் மூன்று நாட்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அண்டை நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு எதிரான கருத்துகள் பதியப்பட்டிருந்தன. அந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்தோம். இந்த வழக்கு தொடர்பாக ஆறு பேரைக் கைது செய்துள்ளோம்.
அதில் சித்திரவதைக்கு ஆளான நபரை நாங்கள் விசாரித்ததில் இந்தியரான, அவர் நேபாள நாட்டவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், மொட்டை அடித்து கொள்ள ஆயிரம் ரூபாய் வாங்கியதையும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.