ரூபாய் 660 கோடி மதிப்பிலான பயிர்க் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாங்கப்பட்ட குறுகிய கால பயிர்க் கடன்களுக்கு இச்சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தவணை தொகையை செலுத்த மத்திய அரசு விவசாயிகளுக்கு மேலும் 2 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தர வசதியாக நபார்டு வங்கிக்கு வட்டி மானியம் அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதோடு கிராமப்புறங்களில் வீடு கட்டுவதை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் அளிக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.