தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள் மற்றும் இணையதளங்கள்
வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள் மற்றும் இணையதளங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் CVigil என்ற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீதோ, கட்சிகளின் மீதோ இந்த செயலி வாயிலாக புகார் அளிக்க முடிகிறது. புகார் அளிக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்குள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
VOTER HELPLINE MOBILE APP எனப்படும் செயலியின் மூலம் வாக்காளர் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அறியமுடிகிறது. SUVIDHA செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டனவா என அறிய முடிகிறது. வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள், புகார்கள் அளிக்க சமாதன் என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த செயலி மூலம் புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவது சிறப்பம்சமாகும். வாக்காளர்கள் இலவச அழைப்பு எண்ணான 1950 ஐ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் நடைபெறும் போது வாக்கு சாவடிகளின் நிலவரங்கள் உடனுடன் தேர்தல் ஆணையத்திற்கு ELECTION MONITORING DASHBOARD என்ற இணையம் வழியாக பதிவிடப்படுகின்றன.
மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில், பல மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சி முறையை கணினி சார்ந்த நெறிமுறையை கொண்டு தேர்தல் ஆணையம் எளிதாக செய்கிறது. தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரவுகளை நிர்வகிக்க SUGAM என்ற இணையத்தை ஆணையம் பயன்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் பரப்புரைகள் செய்வதற்கான அனுமதியை SUVIDHA என்ற இணையதளம் வாயிலாகவும் பெறலாம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை தொழிட்நுட்ப வசதிகளோடு சிக்கலின்றி நடத்தி முடிக்க இந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் உதவும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்த செயலிகள் குறித்து விளம்பரங்கள் வாயிலாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.