“என் மகள் அவ்வாறு செய்தால் தீயிட்டு கொளுத்துவேன்” - நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர்
என் மகள் திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் ஈடுபட்டால், அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பேன் என தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற சிங், தனது தரப்பு நபர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சுரண்டுவதாக குற்றம்சாட்டப்பட்டவர். அதற்கு காரணம் அவர் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியதே. டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக கடுமையான விதிமுறைகளையும் நிறைவேற்றியது. அதே நேரத்தில் பார் கவுன்சில் பலமுறை அவரின் செயல்பாடுகள் குறித்து நோட்டீஸும் அனுப்பியது.
நீதிமன்ற அறையில் விரக்தியடைந்த பொதுமக்களில் சிலர், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளோடு ஏ.பி.சிங்கையும் தூக்கிலிட வேண்டும் என்று கூட முணுமுணுத்தனர். ஆனால் நிர்பயா குற்றவாளிகளான பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் மற்றும் வினய் சர்மா ஆகியோரை சிங் தொடர்ந்து பாதுகாத்தார். நான்காவது குற்றவாளியான முகேஷ் குமார் வேறு வழக்கறிஞரை வைத்திருந்தார்.
லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயன்ற அஜய் பிரகாஷ் சிங், 1997 முதல் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏபி சிங் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “கைது செய்யப்பட்ட கணவர் அக்ஷயை திஹார் சிறையில் சந்திக்க அவரது மனைவி சென்றார். அங்குள்ள ஒருவர் அவருக்கு என் எண்ணை கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும். அவர் எனது வீட்டிற்கு வந்து என் அம்மாவை சந்தித்தார். பின்னர், நான் வீடு திரும்பியபோது, என் அம்மா என்னிடம், இந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க போராட வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார். என் பெற்றோர் எளிய மனிதர்கள். ஆன்மிக நம்பிக்கை அதிகம் உடையவர்கள். அவர்கள் டிவி பார்க்கவில்லை, எனவே ஆர்ப்பாட்டங்கள், ஜந்தர் மந்தர், ராம்லீலா மைதானம், நிர்பயா குறித்து எதுவும் அவர்களுக்கு தெரியாது” எனத் தெரிவித்தார்.
அதன்பின்னர், குற்றவாளிகளில் இருவரான அக்ஷய் மற்றும் வினய் ஆகியோரின் வழக்குகளை ஏ.பி.சிங் எடுத்துக் கொண்டார், ஆனால் இருவரையும் கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க முடியவில்லை. இதனிடையே ரேடியோ சிட்டி, வழக்கறிஞர் ஏ.பி.சிங்கிற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை நடத்தியது, பொது உணர்வுகளை மனதில் வைத்து வழக்கில் இருந்து விலகுமாறும் கேட்டுக்கொண்டது. ஆனால் சிங் அதற்கு பதிலாக மற்றொரு குற்றவாளியான பவனுக்கும் சேர்த்து வாதாட முடிவு செய்தார்.
குற்றவாளிகளை விடுவிப்பதற்காக பாதிக்கப்பட்டவரின் தன்மையை கெடுக்கும் அவசியம் என்ன என்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “இவ்வளவு தாமதமாக அந்தப் பையனுடன் அந்தப் பெண் என்ன செய்து கொண்டிருந்தாள் என்று நான் கேட்க வேண்டாமா? இது ஆதாரங்களின் ஒரு பகுதியாகும். அவர்களுக்குள் சகோதரர்-சகோதரி உறவு இருப்பதாக நான் கூறவில்லை. நான் சொன்னது எல்லாம் அவர்கள் நண்பர்கள். சமூகத்தில், காதலன்-காதலி உறவு பாராட்டத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய கலாசாரத்தில் அது இல்லை. எனது மகளோ அல்லது சகோதரியோ திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் ஈடுபட்டால், நான் அவர்களை எனது குடும்பத்திற்கு முன்னால் அழைத்துச் சென்று, அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பேன்” எனத் தெரிவித்தார். தற்போது சிங்கிற்கு கல்லூரி படிக்கும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

