உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலரை நேரடியாக என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது அரசுக்கு எதிராக நீதிபதிகளை செயல்பட வைக்கவும், சந்திரபாபு நாயுடு பலனடையும் வகையில் நடவடிக்கைகள் இருப்பதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றும் முயற்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு ஊழல் தொடர்பாக தனது அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை உயர் நீதிமன்றம் தடுப்பதாகவும் ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிடக் கூடாது என தடை உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது நேரடியான அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருப்பது நீதித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்.வி.ரமணா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய தலைமை நீதிபதி இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதும், மத்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது உள்ளிட்ட பல கேள்விகளை இந்த கடிதம் தற்போது ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com