இந்திய ராணுவத்தை 'மோடியின் படை' என்று கூறுபவர்கள் நாட்டின் துரோகிகள் என்று மத்திய அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநில காசியாபாத்தில் பாஜகவுக்கு ஆதரவாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''இந்திய ராணுவம் மோடியின் படை'' என்று கூறினார். யோகியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பலரும் 'ஒரு நாட்டின் ராணுவத்தை ஒரு கட்சிக்கு சொந்தமாக எப்படி கூற முடியும்' கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், ராணுவ முன்னாள் தளபதியுமான வி.கே.சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''சிலர் இந்திய ராணுவத்தை 'மோடியின் படை' என்று கூறுகிறார்கள். அவர்கள் தவறாக மட்டும் கூறவில்லை. அவர்கள் இந்த நாட்டின் துரோகிகள். ராணுவம் என்பது இந்திய நாட்டுக்கு சொந்தமானது. தனி கட்சிக்கு சொந்தமானது அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ''யாராவது இந்திய ராணுவத்தை பற்றி பேசவேண்டுமென்றால் ராணுவத்தை மட்டும் குறிப்பிட்டு பேசுங்கள். அரசியல் கட்சிகளுடன் இணைத்து பேசாதீர்கள். நாம் பாஜக தொண்டர்களை மோடியின் படை, மோடியின் ராணுவம் என்று பேசுவோம். அது வேறு. ஆனால் ராணுவத்தை இணைத்து அவ்வாறு பேசுவது தவறு. ராணுவம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கம் கேட்டு யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சிகளும், வேட்பாளர்களும் இந்திய பாதுகாப்பு படைகள் குறித்து தங்கள் பிரசாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.