இந்தியர்கள் எவரும் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்: ஆனால்?
’ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் இந்தியர்கள் எவரும் இனி நிலம் வாங்கலாம்’ என்று நில திருத்தச் சட்டத்திற்கான புதிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மற்றும் 35A பிரிவை நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. 35A பிரிவின்படி, ’ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் மற்ற மாநில மக்கள் நிலம் வாங்க முடியாது. ஆனால், அவர்கள் எங்கும் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, காஷ்மீரின் நிரந்தரக் குடியுரிமை பெற்றப் பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தர குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்காது’ போன்ற சில சிறப்புகள் இருந்து வந்தன.
கடந்த ஆண்டு இந்தப் பிரிவையே மத்திய அரசு நீக்கியதால், இன்று புதிய நிலச் சட்டத்திருத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மூன்றாம் ஆணை 2020’ என்று, இந்த சட்டத்திருத்தம் அழைக்கப்படும்.
அதேநேரத்தில், காஷ்மீர் என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது மனதை கொள்ளையடிக்கும் ஆப்பிள் தோட்டங்கள்தான். மத்திய அரசுதான் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்கலாம் என்று அறிவித்துவிட்டதே… இனிமேல் ஹேப்பியாக ஆப்பிள் தோட்டங்களை வாங்கிவிடலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஜம்மு காஷ்மீர், லடாக்கின் மலைப்பகுதியிலோ, பனி பள்ளத்தாக்குகளின் அருகிலோ, ஏன் பாகிஸ்தான் எல்லை அருகில் கூட நிலத்தை வாங்கலாம். ஆனால், விவசாய நிலத்தை மட்டும் வாங்க முடியாது’ என்று தெளிவாக புதிய நில திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.