
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், யூனியன் பிரதேசமான லடாகிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். தனது லடாக் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று டிப்ரிங் கிராமத்தில் உள்ள மணாலி-லே நெடுஞ்சாலை ஓரமாக இருந்த அடிபம்பை கண்ட அமைச்சர் அனுராக் தாக்கூர் அதனை இயக்கி பார்த்தார். அடிபம்பை சில நொடிகளுக்கு அடித்து, அதிலிருந்து வந்த தண்ணீரை தனது உள்ளங்கையில் பிடித்து குடித்து கட்டைவிரலை உயர்த்தினார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் அனுராக் தாக்கூர், “14 ஆயிரம் அடி உயரத்தில் மணாலி-லே நெடுஞ்சாலையில் உள்ள டிப்ரிங் கிராமத்தில் உள்ள பம்ப் மூலம் இனிப்பான தண்ணீரை குடிப்பது வித்தியாசமான உணர்வை தந்தது'' என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய - சீன எல்லைக்கு அருகில் உள்ள லடாக்கின் சுமுர் பகுதியையும் பார்வையிட்ட அமைச்சர் அனுராக் தாக்கூர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
லடாக்கின் கர்சோக் கிராமத்தில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், "இந்தியாவை வலிமையான மற்றும் சிறந்த தேசமாக மாற்ற தற்போதைய மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பிரதமர் தலைமையிலான வலுவான அரசால் பலம்வாய்ந்த படைகள் ஆதரிக்கப்படுகின்றன. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நாம் உருவாக்கி வருகிறோம்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து கர்சோக் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், லடாக்கின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.
"பிரதமர் மோடி லடாக்கின் விரைவான வளர்ச்சியில் ஆர்வமாக உள்ளார். மேலும் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு, களநிலவரத்தை ஆய்வு செய்வதற்காக பிரதமர், மத்திய அமைச்சர்களை ஆர்வத்துடன் இங்கு அனுப்புகிறார்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த செவ்வாயன்று அமைச்சர் அனுராக் தாக்கூர் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்தித்தார். அவர் அடுத்த வார இறுதியில் சோக்லாம்சார் அருகே ஷெவாட்செல் போதனை மைதானத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக லே செல்கிறார்.