தெலங்கானாவில் நீடிக்கும் சோகம்: பெண் நடத்துநர் தற்கொலை
தெலங்கானாவில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் 25-வது நாளை எட்டியிருக்கும் நிலையில், பெண் நடத்துநர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் அரசு போக்குவரத்துக் கழகத்தை, மாநில அரசுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 12 ஆம் தேதி கம்மம் பேருந்து டிப்போவில் பணியாற்றி வந்த ஓடடுநர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசை கண்டித்து, தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த இரு நாட்களுக்குப் பின், ஹைதராபாத்தில் வசித்து வந்த சுரேந்தர் கவுட் என்ற நடத்துநர் தனது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்தது. இந்நிலையில், நீரஜா என்ற நடத்துநரும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

