கொல்லப்படும் லாரி ஓட்டுநர்கள்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் !
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலையை அறிவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் செல்லவுள்ள நிலையில், அங்கு மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள் முதலாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரிவினைவாத தலைவர்களும் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணைய சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஸ்ரீநகர் செல்லவுள்ளனர். அவர்கள், உள்ளூர் மக்களை சந்தித்து சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான கருத்துகளை நேரடியாக கேட்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் நாராயண் தத் என்ற லாரி ஓட்டுநரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் பிஜ்பேஹாராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து இரு லாரி ஓட்டுநர்களை காப்பாற்றினர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல், லாரி ஓட்டுநர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாராயண் தத்துடன் சேர்த்து இதுவரை 4 லாரி ஓட்டுநர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.