3 மாதங்களில் 2-ஆவது சம்பவம்... ஒடிசா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு நேபாளி மாணவியின் விபரீத முடிவு!
ஒடிசா மாநிலம், கேஜஜடியில் பி.டெக். கணிணி அறிவியல் முன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாளத்தை சேர்ந்த மாணவி ஒருவர், இரு பெண் அதிகாரிகள் திட்டியதால் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறி சக நேபாள மாணவர்களும் பிற மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது, இந்த செய்தியின் சோகம் மறைவதற்குள் அதே பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த வியாழன் (1.5.2025) அன்று இரவு 8 மணியளவில் விடுதி அறையில் மாணவி தற்கொலை செய்தநிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதியின் காப்பாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த மாணவி கேஜஜடியில் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவி என்பதும், இவர் நேபாளத்தின் பிர்கஞ்சை சேர்ந்த பிரிசா ஷா என்றும் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இரவு 7 மணிக்கு வருகை பதிவு எடுத்தபோது மாணவி பதிலளிக்கவில்லை. இதனையடுத்து விடுதி காப்பாளர் அறைக்கு சென்று பார்த்தபோது இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
காவல் ஆணையர் இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் இயற்கைக்கு மாறான மரணம் என்ற வழக்கைப் பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினோம். யாராவது இதில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து அம்சங்களையும் நாங்கள் விசாரிப்போம். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" என்று கூறினார்.
ஒரே கல்லூரியில் இரண்டு மாதங்களுக்குள் அடுத்தடுத்து நடந்த நேபாள மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.