EXCLUSIVE | மணிப்பூர்: “என் கண்முன்னே என் மகளை வன்கொடுமை செய்து..!” நெஞ்சை உலுக்கும் மற்றொரு கொடூரம்

மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதில் உச்சபட்ச கொடுமைகளை பெண்களும் குழந்தைகளுமே அனுபவிக்கின்றனர்.

உலகில் எந்த மூலையில் போரோ, கிளர்ச்சியோ, மோதலோ நடந்தாலும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவது பெண்களாக இருக்கிறார்கள். பெண்களை சிதைப்பதன்மூலம் இன அழிப்பை சாத்தியமாக்கிவிட முடியும் என்பதே இதன் பின்னணியில் உள்ள குரூர நோக்கம். அப்படித்தான் மணிப்பூரில் இரண்டு இன மக்களின் மோதலில் பெண்களுக்கு அநியாயம் நேர்ந்து கொண்டிருக்கிறது .

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செயல்படும் மெய்தி இனக் குழுவினருக்கான முகாமிற்கு நமது 'புதிய தலைமுறை' குழு சென்றபோது, சுக்னு பகுதியில் இருந்து வந்து தஞ்சமடைந்திருந்த பெண்களில் இருவரை சந்தித்தோம். சுக்னு என்பது இம்பாலுக்கு தெற்குப் பகுதியில் மலையும், சமவெளியும் இணையும் இடமாக இருப்பதால் இங்கு குக்கி மற்றும் மெய்த்தி மக்கள் இணைந்து வசிக்கிறார்கள்.

Manipur Violence
Manipur Violence

கலவரம் தொடங்கிய மே 3 ஆம் தேதியில் இருந்து சுக்னு பகுதி வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது வீடு புகுந்து சூறையாடுதலோடு, பெண்களை துன்புறுத்தும் சம்பவங்களும் அதிக அளவில் நடந்துள்ளன. அப்படி ஒரு சூழலில் வன்முறையாளர்கள் வெறியாட்டத்துக்கு தனது மகளை இழந்திருக்கிறார் இந்த தாய். தனது கண்முன்னேயே மகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டிருக்கிறார் அந்த தாய்.

வன்கொடுமையால் மகளை இழந்த தாய்
வன்கொடுமையால் மகளை இழந்த தாய்புதிய தலைமுறை

சுக்னுவில் மட்டும் நான்கு பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு எந்த உறுதியும் இல்லாத சூழலில், தங்கள் உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஒளிந்தும் பலனின்றி வன்முறையாளர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் நம்மிடம் அந்த கொடூர சம்பவம் பற்றி நடுக்கத்துடன் பகிர்ந்தார். அதை, செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்.

மணிப்பூரில் தற்போது நிகழ்ந்து வரும் வன்கொடுமையில் குக்கி இனத்தைச் சேர்ந்த 20 பெண்களும், மெய்தி இனத்தை சேர்ந்த 5 பெண்களும் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் 70க்கும் அதிக குக்கி, மெய்தி இனப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் அங்கிருப்பவர்கள்.

மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதில் உச்சபட்ச கொடுமைகளை பெண்களும் குழந்தைகளுமே அனுபவிக்கின்றனர் என்பதே மணிப்பூரின் கள நிலவரமாக இருக்கிறது.

Manipur Violence
மீண்டும் மீண்டும் தொடரும் வன்கொடுமை சம்பவங்கள்... மணிப்பூர் பெண்கள் இவ்வளவு மௌனம் காப்பது ஏன்?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com