சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்க கோரி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அண்ணா ஹசாரே லோக்பால் மற்றும் லோக் ஆயுத்தா அமைக்க கோரி மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போவதாக மாநில அரசிற்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்கவில்லை எனவும் எனக்கு வாக்கு கொடுத்து 9 மாதங்கள் கடந்தும் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
லோக் ஆயுக்தா அமைக்காததை கண்டித்தும் விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் ஜனவரி 30 முதல் என்னுடைய கிராமத்தில் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காந்தியின் நினைவு நாளான நேற்று அண்ணா ஹசாரே அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது, கிராமமான ரலேகான் சித்தியில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் அண்ணா ஹசாராவை சந்தித்து உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். எனினும், ஹசாரே அவரை சந்திக்க மறுத்துவிட்டதால் மகாஜன் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணா ஹசாரே, மகராஷ்டிரா முதலமைச்சரையும் லோக் அயுக்தா விசாரிக்க முடியும் என்ற முடிவை மகராஷ்டிரா அரசு எடுத்துள்ளது வரவேற்கக்கூடியது எனவும் ஆனால், லோக்ஆயுக்தா சட்டம் இயற்றி, நீதிபதி நியமிக்கும் வரையிலும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும்வரையிலும் என்னுடைய உண்ணாவிரதம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவித்த பின்னரே உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்றும் ஹசாரே கூறியுள்ளார்.