ஒரே நாளில் 16 சூரிய உதயம்.. அனில் மேனனின் வியப்பூட்டும் விண்வெளி வாழ்க்கை!!
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளிவீரர் அனில் மேனன், தற்போது சர்வதேச விண்வெளி நிலையமான ஐஎஸ்எஸ்-ல், 8 மாத கால விண்வெளி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஜூலை 14ஆம் தேதியன்று சோயுஸ் எம்எஸ்- 29 விண்கலத்தில் புறப்பட்டு, தற்போது பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில் அனில்மேனனின் ஐஎஸ்எஸ் பயணம், விண்வெளி வாழ்க்கையின் வியப்பூட்டும் ஒரு உண்மையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. அதாவது விண்வெளி நிலையமான ஐஎஸ்எஸ், மணிக்கு 28,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதால், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுமையாக சுற்றிவிடுகிறது.
அதன்படி ஒவ்வொரு முறையும் பூமியின் நிழலுக்குள் செல்லும்போது, அங்கு சூரிய அஸ்தமனம் தெரிகிறது. மீண்டும் நிழலில் இருந்து வெளியே வரும்போது சூரிய உதயம் தென்படுகிறது. இதனால் 24 மணி நேரத்தில் விண்வெளி நிலையமான ஐஎஸ்எஸ், சுமார் 16 சுற்றுகளை முடிப்பதால், அனில் மேனனும் மற்ற விண்வெளி வீரர்களும் தற்போது, 16 சூரிய உதயங்களையும், 16 சூரிய அஸ்தமனங்களையும் பார்ப்பதாக சர்வதேச விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்வெளி நிலையத்தில், மருத்துவரும் விண்வெளி வீரருமான அனில் மேனன், மனித உடலில் நீண்டகால வெண்வெளி பயணத்தின் தாக்கம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் எதிர்கால சந்திரன், செவ்வாய் பயணங்களுக்கு உதவும் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வு செய்துவருகிறார். நாளை காலை சூரிய உதயத்துக்கு காத்திருப்பது நாம் என்றால், விண்வெளி வீரர் அனில் மேனனுக்கோ சில நிமிடங்களில், அடுத்த சூரிய உதயம் வந்துவிடும்..

