’எனக்காக ஒரு மரம் நடுங்கள் போதும்’ என்று மறைந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60) உயில் எழுதி வைத்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் நேற்று காலை திடீரென காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. இந்நிலையில், அனில் தவே எழுதியிருந்த உயில் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு எழுதியிருக்கும் உயிலில் தன் உடல் நர்மதா ஆற்றங்கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர், ‘என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக, ஒரு மரம் நடுங்கள் போதும்’ என்று தன் உயிலில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.