“கவலையாலும், பயத்தாலும் துடித்தனர் ’- குற்றவாளிகளின் கடைசி மணி நேரங்களை விவரித்த அதிகாரி

“கவலையாலும், பயத்தாலும் துடித்தனர் ’- குற்றவாளிகளின் கடைசி மணி நேரங்களை விவரித்த அதிகாரி
“கவலையாலும், பயத்தாலும் துடித்தனர் ’-  குற்றவாளிகளின் கடைசி மணி நேரங்களை விவரித்த அதிகாரி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கதறித் துடித்தனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில், ஓடும் பேருந்தில் 23 வயதான இளம் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நால்வரையும் இன்று அதிகாலை தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. அதன்படி நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே நாம் நாளை தூக்கிலிடப்பட போகிறோம் என்ற செய்தியை அறிந்த அவர்கள் நேற்று கவலையாலும், பயத்தாலும் துடித்துள்ளனர். மேலும் வழக்கமாக மாலை வேளைகளில் அவர்கள் அருந்தும் தேநீரையும் அருந்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது “டெல்லி நீதிமன்றம் அவர்களது சீராய்வு மனுக்களை நிராகரித்த செய்தியை கேட்ட அவர்கள் பதட்டமடைந்து பயத்தால் கதறித் துடிக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து அவர்கள் தனி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் தாங்களே தங்களை காயப்படுத்திக் கொண்டனர். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அதைத் தடுத்தனர். பின் அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களுடன் பேசுவதற்கு ஒரு ஆலோசகரும் நியமிக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கையையும் கண்காணிக்க அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்” என்றார்.

மற்றொரு சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது “ தூக்குத் தண்டனையானது திகார் சிறையின் விதிகளின் படி இன்று காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அவர்களது சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக டிடியு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கைதிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை அவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை. ஏனெனில் அதை செய்வதற்கு அவர்கள் மறுக்க தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மறுத்தாலும் திகார் விதிமுறைகளின் படி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தபடும். சிறையில் அவர்கள் பணி செய்து சம்பாதித்த பணமானது அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைதிகள் தூக்குமேடைக்கு வருவதற்கு முன்னர், சிறை கண்காணிப்பாளர் கைதிகளை பார்க்க வந்தார். அதன் பின்னர் அவர்களை தூக்கிலிடுவதற்கான வேலைகள் நடைபெற்றது. கண்காணிப்பாளர் தூக்கிலிடுவதற்கான ஆணையை வடமொழியில் மொழிபெயர்த்தார். இதனைத்தொடர்ந்து கைதிகளிடம் பெற வேண்டிய கையெழுத்து படிவங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com