ஆதாரில் குடும்பப்பெயரையே மாற்றி சிறுநீரக மோசடி; கடன் தொல்லையால் தவித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
ஆந்திர மாநிலம் ஏலூர் நகரைச் சேர்ந்தவர் அனுராதா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்தப் பெண்ணின் பொருளாதார நிலையை சாதகமாக பயன்படுத்தி, சிறுநீரக தரகர் என்ற போர்வையில் களத்தில் இறங்கிய நபரொருவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றால் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் மற்றும் பணத் தேவையை பயன்படுத்தி, சிறுநீரகக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதில் அப்பெண்ணின் குடும்பப் பெயரை மாற்றி அவரின் சிறுநீரகத்தை சூறையாடியுள்ளது அந்தக் கும்பல். அதன்படி முதலில் பெண்ணின் ஆதார் அட்டையில் உள்ள குடும்பப் பெயர், சிறுநீரகம் வாங்குபவரின் மனைவி என மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சிறுநீரகம் தேவைப்படும் அந்த ஆணின் மனைவியாக இவரின் ஆதார் அட்டையை உருவாக்கிய அவர்கள், சிறுநீரகத்திற்கு முதலில் ரூ.7 லட்சம் தருவதாகக் கூறி பேரம் பேசியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தை எடுத்த அவர்கள், பின்னர் ஐந்து லட்சம் மட்டும் கொடுத்தாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டுகிறார். மேலும், தனது மருத்துவச் செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அந்தப் பெண் சொல்கிறார். இதையடுத்து மீதிப் பணத்தைத் தருமாறு கேட்டபோது, தம்மைக் கஷ்டப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர் என்று அந்தப் பெண் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
சிறுநீரகம் செயலிழந்து உடம்பு சரியில்லை என்று அழுகும் அந்தப் பெண், ஒருபுறம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தவிக்கும் நிலையில், மறுபுறம் ஆதார் அட்டையில் குடும்பப் பெயர் மாற்றப்பட்டதால் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என தனது கவலையை வெளிப்படுத்தினார்.