ஆந்திரா | கோயில் விழாவின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்து - 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
செய்தியாளர்: எழில்
ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் சிம்ஹாச்சலம் பகுதியில் உள்ள சிம்ஹாத்ரி அப்பண்ண சுவாமியின் சந்தன திருவிழா நடைபெற்றது. அப்போது, அதிகாலையில் சாமி தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் மீது சிமெண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிகழ்விடத்திற்குச் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் 4 ஆண்கள், 3 பெண்கள் என தெரியவந்துள்ளது. 7 பேரின் சடலங்களையும் மீட்ட காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ நடந்த இடத்திற்குச் சென்ற மாநில உள்துறை அமைச்சர் அனிதா, ஆட்சியர் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.