ஆந்திராவில் காலதாமதத்தின் காரணமாக சுமார் 400 வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுடன், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரம் வேலை செய்யாததால், வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாலும் வாக்களிக்க தாமதமானது. இதனால் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்த நேரத்தையும் கடந்து சுமார் 400 வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர். தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அமராவதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

