பகலில் நைட்டி அணிந்தால் 2ஆயிரம் அபராதம் - ஒரு விநோத தடை !

பகலில் நைட்டி அணிந்தால் 2ஆயிரம் அபராதம் - ஒரு விநோத தடை !

பகலில் நைட்டி அணிந்தால் 2ஆயிரம் அபராதம் - ஒரு விநோத தடை !
Published on

பகலில் நைட்டி அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆந்திராவில் உள்ள கிராமத்தில் விநோத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு கோதாவரியில் உள்ள தோகலபல்லே கிராமத்தில் தான் இப்படியொரு தடை அந்த ஊர் பெரியவர்களால் போடப்பட்டுள்ளது. 

இளம் பெண்கள் பகலில் நைட்டி அணிந்து கொண்டு, வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வருவது பார்ப்பதற்கு நாகரிகமாக இல்லை என்று கூறி, வயதில் மூத்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து, 6 மாதங்களுக்கு முன்பு இந்த முடிவினை எடுத்தனர். 

இதனையடுத்து, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய விதிக்கப்பட்ட தடையை ஒலிப்பெருக்கி மூலம் ஊர் முழுவதும் அறிவித்தனர். அப்போது, தடையை மீறி பகலில் யாரேனும் நைட்டி அணிந்திருந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தடையை மீறி நைட்டி அணிந்தவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு சன்மானமாக ரூ1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. உடல்நிலை குன்றியவர்களுக்கு மட்டும் இந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்டது முதல் இத்தனை மாதங்களாக புகார்கள் எதுவும் வரவில்லை. யாருக்கும் அபராதம் இதுவரை விதிக்கப்படவில்லை. ஆனால், தீபாவளி பண்டிகையின் போது அந்தக் கிராம மக்கள் சிலர் இந்தத் தடை குறித்து ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், கிராமத்திற்குள் வரும் செய்தியாளர்களிடம் தாங்கள் இந்தத் தடையை ஆதரிப்பதாகவே கூறியுள்ளனர். 

இதனையடுத்து, தகவல் அறிந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்தக் கிராமத்திற்கு சென்றுள்ளனர். சில பெண்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இப்படியொரு தடையை விதித்ததாக அதிகாரிகளிடம் முதியவர்கள் கூறியுள்ளனர். இது ஒரு சிறிய அறிவிப்புதான் என்றும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறிய அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே நைட்டி பகலில் அணிய தடை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மூத்த பெண்கள் கூறுகையில், “என்னதான் நைட்டி அணிவதற்கு எளிதாக இருந்தாலும், வீட்டிற்கு வெளியேயும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அது அணிந்து செல்ல உகந்தது அல்ல. நைட்டி என்பது இரவு நேரங்களில் மட்டும் பயன்படுத்துவதற்கு தான். மேலும், நைட்டி என்பது இந்து கலாச்சாரத்தில் இல்லை. இளம் தலைமுறை பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடைகளான புடவை, தாவணி போன்றவற்றை அணியாதது கவலை அளிக்கிறது. அவர்கள் கோயிலுக்குச் சென்று பூஜை செய்யும் போதும் நைட்டி அணிந்து செல்கிறார்கள். இளம் பெண்கள் ஒழுக்கங்களை கடைபிடிப்பதில்லை” என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, மற்றவர்கள் அணியும் ஆடைகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறானது, சட்ட விதிகளுக்கு எதிரானது என்று அந்தக் கிராம மக்களிடம் எடுத்து கூறியுள்ளனர். மேலும், இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலை ஒட்டியுள்ள தோகலபல்லே மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமாக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 3,272. இது, முக்கிய நகரங்களில் இருந்து தொலை தூரத்தில் உள்ள கிராமம். விஜயவாடா நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com