
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் பஞ்சகட்டா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லியாகத் என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சென்று பிரியாணி வாங்கியுள்ளார். அப்போது, ஹோட்டல் ஊழியர்களிடம் கூடுதலாக தயிர் பச்சடி தரும்படி கேட்டுள்ளார். இதில், ஏற்பட்ட மோதலில் லியாகத் கடுமையாக தாக்கப்பட்டு, உயிரிழந்து விட்டார்.
இதுபற்றிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், 'கடந்த 10ஆம் தேதி லியாகத் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரியாணி வாங்க கடைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அப்போது குடிபோதையில் இருந்துள்ளனர். லியாகத் பிரியாணியை வாங்கிவிட்டு, கூடுதலாக தயிர் பச்சடி கேட்டுள்ளார்.
அது கிடைக்காதபோது, ஹோட்டல் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வார்த்தையில் வெடித்த மோதல் பின்னர் அடிதடியில் இறங்கியுள்ளது. சி.சி.டி.வி. கேமராவில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. இதன்பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், லியாகத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை சுயநினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என அறிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.