ஆந்திராவில் கூகுள் நிறுவனம் மெகா முதலீடு.. ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட இருப்பது, ஆந்திராவை மறுஉருவாக்கம் செய்யும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட்டத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய தொழில் துறையில் மட்டுமல்லாமல், அரசியல் அரங்கிலும் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது கூகுள் நிறுவனத்தின் சமீபத்தியஅறிவிப்பு. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட இருப்பது, ஆந்திராவை மறுஉருவாக்கம் செய்யும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட்டத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில் ஆந்திராவின் அங்கமாக இருந்த ஹைதராபாத்தை இந்தியாவின் ஐடி மையமாக மாற்றிய பெருமை சந்திரபாபு நாயுடுவுக்கு உண்டு. ஆனால், தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத்தை இழந்த ஆந்திரா, வளர்ச்சியில் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த வரலாற்றுத் தொய்வுக்குப் பிறகு, மீண்டும் ஆட்சிக்கு வந்த நாயுடு, ஆந்திராவின் முக்கிய நகரங்களை அதன் தொழில் வாய்ப்புகளின் அடிப்படையில் மறுகட்டுமானம் செய்யத் தொடங்கினார். இதன் நீட்சியாக, தான் ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டுக்குள் அதானி, பிபிசிஎல், எல்ஜி உட்பட ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த வரிசையில் கூகுளின் மெகா முதலீடு, ஆந்திராவை மறு உருவாக்கம் செய்யும் அவரது தீவிர முயற்சியின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்தபின், பெரும்பாலும் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கே பெரும் முதலீடுகள் செல்கின்றன என்றஅரசியல் விமர்சனம் நிலவுகிறது. இந்தச் சூழலில், மோடி அரசு அமைய முக்கியப் பங்காற்றிய நாயுடுவின் ஆந்திராவுக்கு இந்தக் கூகுள் முதலீடு வந்திருப்பது, மத்தியில் உள்ள ‘கூட்டணிக் கட்சிகளுக்கான சிறப்புச் சலுகை' என்ற அரசியல் கோணத்தை வலுப்படுத்துகிறது.
உலகின் முக்கிய ஏஐ தொழில் மையங்களில் ஒன்றாக இந்தியா வளரத் துடிக்கும் நேரத்தில், கூகுளின் இந்த முதலீடு ஆந்திராவை இந்தியாவின் ஏஐ மையமாக மாற்றும் வாய்ப்பை வழங்குகிறது. தொழில் வளமிக்க அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றுக்கு மத்தியில், தனதுஅரசியல் மற்றும் நிர்வாகத் திறமையைப் பயன்படுத்தி நாயுடு இந்த மெகா முதலீட்டை ஈர்த்திருப்பது, தென்னிந்தியப் பொருளாதார அரங்கில் ஆந்திராவை வலிமையாக முன்னிறுத்துகிறது. எனினும் இந்த முதலீடு ஆந்திராவுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குமான ஒரு முக்கியமான நகர்வு என்பதில் சந்தேகமில்லை.