ஆந்திரா: கிருஷ்ணா நதியில் தீடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரிகள்

ஆந்திரா: கிருஷ்ணா நதியில் தீடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரிகள்
ஆந்திரா: கிருஷ்ணா நதியில் தீடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மணல் லாரிகள்

ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மணல் எடுக்க சென்ற லாரிகள் சிக்கியதால் அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை ஆந்திர அரசு துரிதப்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமா தொகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் மணல் எடுக்கச் சென்ற 20-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. புலிசிந்துலா அணையில் இருந்து 25,000 கனஅடி தண்ணீரும், முன்னேறு அணையில் இருந்து 15,000 கனஅடி தண்ணீரும் உபரி நீராக கிருஷ்ணா நதியில் திறக்கப்பட்டது.

இதனால், கன்சிகசெர்லா மண்டலம் செவிட்டிகல்லு பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில் மணல் எடுக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதையடுத்து மணல் லாரிகள் செல்லும் சாலையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 20-க்கும் மேற்பட்ட லாரிகள் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் இருந்த சாலைகளும் சேதமடைந்தன. 100-க்கும் மேற்பட்ட லாரிகள், ஆற்றின் மற்றொரு புறத்திலும், 20-க்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீரிலும் சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம், 100 லாரி ஓட்டுநர்களை கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

எனினும், தண்ணீரில் சிக்கிய லாரி ஓட்டுநர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு லாரிகளை பத்திரமாக கரைக்கு கொண்டு வரும் பணிகள் தொடங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புலிசிந்தலு மற்றும் முன்னேறு அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டாலும் 6 மணி நேரத்திற்கு பின் தண்ணீர் வடிந்தால்தான் முழுமையான மீட்பு பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com