அடேங்கப்பா......! மலையைத் தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன் கட்டிய அரண்மனை.. #ViralVideo
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனது முதல், தன்னை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஜெகன் மோகன் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், ஆந்திராவில் ருஷிகொண்டா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தகர்த்து, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை கட்டியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
ஏற்கெனவே, டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழக்கக் காரணமாக இருந்தவைகளில் ஒன்று, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின், ஷீஷ்மஹால் விவகாரம். அவர் ஆடம்பரமான வீடு கட்டுவதில் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தைப் புதுப்பிக்க அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.40 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரண்மனை வீடும் பேசுபொருளாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ருஷிகொண்டா மலையைத் தகர்த்து 10 ஏக்கர் பரப்பளவில் இந்த அரண்டனை நான்கு பகுதிகளைக் கொண்ட கட்டடங்களாக அமைக்கப்பட்டுள்ளது. மலையைத் தகர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரிகிறது. இந்த அரண்மனைக்குள் தங்க அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரப் பொருட்கள், மின்னும் சரவிளக்குகள், குளியல் தொட்டிகள் போன்ற ஆடம்பரமான உட்புறங்களைக் கொண்டுள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் உள்கட்டமைப்பில் நடைபாதை சாலைகள் மற்றும் வடிகால் அமைப்பு, மொத்த நீர் விநியோகம் மற்றும் 100 KV மின் துணை நிலையம் ஆகியவையும் அடங்கும். இவை எல்லாம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதல்வர் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிராக இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், இது பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இது ரூ.91 கோடி பட்ஜெட்டில் ஒரு நட்சத்திர ஹோட்டலாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததன் மூலம், மொத்த செலவு ரூ.500 கோடியைத் தாண்டியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. அப்படியான இந்த அரண்மனைதான், தற்போது ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இப்போது அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்து, அதைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், “முன்னாள் முதல்வர் நீதிமன்றங்களை ஏமாற்றியது, சுற்றுச்சூழல் மீறல்களைச் செய்தது மற்றும் ஆடம்பர வாழ்க்கை நடத்த பொதுப் பணத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பதற்கான வழக்கு பற்றிய ஆய்வு இது. அரசியலில் இத்தகைய தலைவர்கள் இருப்பது குறித்தும், அவர்கள் நமக்கு உண்மையில் தேவையா என்பது குறித்தும் பரந்த விவாதம் தேவை. தற்போது, இந்தக் கட்டடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பது குறித்து எனக்கு எந்த யோசனையும் இல்லை. இந்தக் கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு உகந்தவை அல்ல. விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் மீது வழக்கு பதிந்து இந்த அரண்மனையைப் பூட்டி சீல் வைக்கப்படுமா அல்லது அரசாங்கத்திற்கு இது பயன்படுத்தப்படுமா என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்கிறது தெலுங்கு தேசம் அரசு.