வயலில் கிடைத்த வைரம்.. கொட்டிய பண மழை.. ஒரேநாளில் லட்சாதிபதியான ஆந்திர பெண் விவசாயி!
அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி, ஒருவேளை ஒருவரது வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டால், அவரது வாழ்வே தலைகீழாக மாறிவிடும். பெரும்பாலும் அதிர்ஷ்டம் லாட்டரிச் சீட்டு, புதையல் உள்ளிட்டவற்றால் கிடைக்கப்படுகிறது. அப்படியான ஓர் அதிர்ஷ்டம்தான் ஆந்திர மாநிலம் பெண் விவசாயிக்குக் கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்காலி மண்டலத்தில் உள்ள திகுவா சிந்தல்கொண்டா கிராமத்தில் பெண் விவசாயி ஒருவர், தனது விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்தார். அப்போது, தனது வயலில், மின்னும் ஒரு பொருளைக் கண்டெடுத்தார். பின்னர், அது ஒரு வைரம் என்பதை உணர்ந்தார். தொடர்ந்து, அதை விற்கவும் முடிவு செய்தார். இதற்கிடையே வைரம் பற்றிய அவரது கண்டுபிடிப்பு பற்றிய செய்தி சமூக ஊடகங்களில் பரவியது.
மேலும், ஜோனகிரி காவல் நிலைய எல்லைக்குள் நடந்த இந்தச் சம்பவம், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வைரத்தை வாங்க வைர வியாபாரிகள், போட்டி போட்டுக்கொண்டு அவரது வீட்டுக்கு விரைந்தனர். ஆரம்பத்தில், அந்தப் பெண் விவசாயியும் அவரது குடும்பத்தினரும் அந்த வைரக் கல்லுக்கு ரூ.18 லட்சத்தை விலையாக நிர்ணயித்தது. ஆனால் அங்குச் சென்ற வைர வியாபாரிகள் குழுவோ ஒரு சிண்டிகேட் அமைத்து ரூ.8 லட்சத்தை மட்டுமே வழங்குவதாக முன்வந்தது. ஆனால், அக்குடும்பத்தினர் அத்தொகையை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
இறுதியில், துக்கலி மண்டலத்தில் உள்ள சென்னம்பள்ளியைச் சேர்ந்த ஒரு புதிய வியாபாரி அந்த வைரத்தை ரூ.13.5 லட்சத்திற்கு வாங்கினார். இதன்மூலம் பெண் விவசாயியான அவர், ஒரேநாளில் லட்சாதிபதியானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜோனகிரி சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா, ”அந்த வைரம் உண்மையில் ரூ.13.5 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக என விசாரிக்க நாங்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அங்கே அவர்கள் யாரும் விற்பனையை உறுதிப்படுத்தவில்லை” என உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரம், சமீப காலங்களில் இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க வைரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜோனகிரி, பகிடராய், எர்ரகுடி, துக்கலி மற்றும் உப்பர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் அவ்வப்போது வைரங்கள் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.