தொழில் நடத்த சிறந்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம்! தமிழகத்தின் நிலை என்ன?
தொழில் நடத்த சிறந்த மாநிலங்கள் தரவரிசையில் இந்தாண்டும் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஆண்டுதோறும் அனைத்து மாநில தொழில் வளர்ச்சியையும் அளவிட்டு தரவரிசை பட்டியலிடுகிறது. மார்ச் மாதமே வெளியாக வேண்டிய 2019-ம் ஆண்டுக்கான தரவரிசை, கொரோனாவால் தள்ளிப்போய் நேற்று வெளியாகியிருக்கிறது.
தொழில் தொடங்கி நடத்த ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா மாநிலமே இந்த ஆண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 12-வது இடத்திலிருந்த உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த தெலங்கானா மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இவை தவிர டாப் 10 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் ஆகியவை உள்ளன. இதில் தமிழகம் இடம்பெற வில்லை.
கட்டுமான அனுமதி, தொழிலாளர் ஒழுங்குமுறை, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்களை அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை மற்றும் ஒற்றை சாளர அமைப்பு போன்ற அளவீடுகளை கொண்டு இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.