ஆந்திரா: காதலித்து பேச மறுத்த இளம் பெண்ணுக்கு காதலனால் ஏற்பட்ட கொடூரம்
ஆந்திராவில் இளம் பெண் தீயில் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காதலன் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்தவர் ஸ்நேக லதா. எஸ்பிஐ வங்கியின் ஊழியரான இவர், நேற்று முன்தினம் காணாமல்போனதாக இவரது தாயார், அனந்தபுரம் ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, காவல்துறையினரின் தேடுதலில் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் செய்த விசாரணையில், ஸ்நேக லதாவை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இடையில் பேச மறுத்ததால், நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து வயல் வெளியில் கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே காவல் நிலையத்தில் ராஜேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தமது மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக ஏற்கெனவே புகார் அளித்ததாகவும், அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது என பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பத்மா ஆகியோர் இந்த சம்பவம் குறித்து ஆறுதல் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட ஸ்நேக லதா தேசிய அளவிலான ஹாக்கி விளையாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.