“அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல” - அமைச்சர் கருத்துக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு
ஆந்திராவின் தலைநகருக்கு அமராவதி ஏற்ற இடமல்ல என்று கூறிய ஆந்திரப் பிரதேச அமைச்சரின் கருத்துக்கு தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிந்தபின் ஆந்திர அரசின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். இதையடுத்து அமராவதியை பிரம்மாண்டமாக உருவாக்குவதற்கும், அரசு கட்டடங்களை நவீன மற்றும் பாரம்பரியமிக்கதாகக் கட்டவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி ஆட்சியை இழந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், அமராவதி தலைநகருக்கு ஏற்ற இடமல்ல என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் சத்யநாராயணா போஸ்டா நேற்று கூறியிருந்தார். ‘சந்திரபாபு நாயுடு எடுத்தது தவறான முடிவு. அமராவதியில் கிருஷ்ணாநதி பாய்வதால் இந்தப் பகுதியில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால், வெள்ள நீரை முறையாக வெளியேற்ற அணைகள், கால்வாய்கள் உள்ளிட்டவை கட்டப்பட வேண்டியுள்ளது’ என்று அவர் கூறினார்.
அமைச்சர் சத்யநாராயணாவின் கருத்துக்கு தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கு தேசம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் போட்ஸாவின் கருத்து பொறுப்பற்றது. தலைநகருக்கு அமராவதி ஏற்றதல்ல என்று ஆதாரமில்லாமல் பேசுகிறார். துறைமுகங்கள் கட்டப்பட்டு சர்வதேச தொழில் பகுதியாக மாற்ற முடியும் என்பதால் அமராவதி முதல் தேர்வாக இருந்தது” என்றார்.