ஆந்திரா: ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் குழந்தை பலி; 7 புலம்பெயர் தொழிலாளர்களை காணவில்லை
இன்று அதிகாலை ஒடிசா-ஆந்திரா எல்லையில் விசாகப்பட்டினத்திலுள்ள சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. 8 புலம்பெயர் தொழிலாளர்களை காணவில்லை.
ஹைதராபாத்தில் பணியாற்றிய 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று இரவில் விசாகபட்டினம் சித்ரகொண்டா காவல் நிலைய எல்லையிலிருந்து சிலேரு ஆற்றில் ஒடிசாவுக்கு இரண்டு படகில் புறப்பட்டனர். புறப்பட்ட சில நிமிடங்களிலே ஒரு படகு நீரில் மூழ்கியது, அந்த படகில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்ற மற்றொரு படகும் ஆற்றில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணவில்லை, ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மூன்று பேர் பாதுகாப்பாக கரைக்குச் சென்றனர்.
இது குறித்து பேசிய விசாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் பி.வி.கிருஷ்ண ராவ், ”இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்தது. தெலங்கானா அரசு மாநிலத்தில் கடுமையான ஊரடங்கை அறிவித்திருப்பதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்குச் சென்றனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில மீட்புக் குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடி வருகிறது” என தெரிவித்தார்.