“நீண்டகால நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் உதவித் தொகை” - ஆந்திர அரசு
நீண்டகால நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மாத உதவித் தொகையை வழங்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தவுடன் பல முக்கிய திட்டங்களை அதிரடியாக அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நீண்டகால நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு மாத பென்ஷன் வழங்கும் முடிவை ஆந்திர அரசு எடுத்துள்ளது. அதாவது தலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய் பாதிப்பால் நடமாட முடியாமல் முடங்கி உள்ளவர்கள் மற்றும் சக்கர நாற்காலியிலுள்ள நோயாளிகள், சிறுநீரக பாதிப்புகளால் அவதி பட்டு வருபவர்கள் என அனைவருக்கும் மாதம் 5000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகளை பெற மக்கள் உள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து சான்றிதழ் பெற்று தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.