
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக கைதாகி கடந்த 34 நாட்களாக ராஜமன்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சந்திரபாபுவுக்கு தோல் ஒவ்வாமை ஏற்பட்டதால் சிறை அதிகாரிகள் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய சிறைக்கு சென்ற தோல் மருத்துவர்கள் சூர்யநாராயணா, சுனிதாதேவி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து சந்திரபாபுவின் உடல்நிலையை கண்காணிக்க சிறையில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடும் வெயில் மற்றும் வெப்பத்தால் சந்திரபாபுவுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் சுகாதார அறிக்கையை வெளியிட்டுள்ளனர். சந்திரபாபுவின் உடல்நிலை குறித்து அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் அவருடைய மனைவி பாமணி, சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி ஆகியோர் எக்ஸ் பக்கத்தில், தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், “சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
தற்போது அவருக்கு ஐந்து கிலோ எடை குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர் சிறையில் இருக்கும் இடத்தில் மின்விசிறி இல்லை, ஏசி இல்லை. முன்னாள் முதல்வருக்கு ஏ கிளாஸ் சிறை வழங்க வேண்டும். ஆனால், ஆளும் கட்சியின் உத்தரவால் சாதாரண சிறை கைதிகளுக்கு வழங்கும் சிறையே சந்திரபாபு நாயுடுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜாமந்தி சிறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், “சந்திரபாபு நாயுடுவுக்கு எந்தவித அச்சமோ, தவறான எண்ணமோ தேவையில்லை” என தெரிவித்துள்ளனர். மேலும் ராஜமுந்திரியை சுற்றி கடந்த சில நாட்களாக வானிலை சரியில்லை. 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள சிறையில் சந்திரபாபு இருந்ததால் அவருக்கு உடல்நிலை மோசமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.