ரூ.3,500 கோடி மதுபான ஊழல்.. ஆந்திர Ex முதல்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேச கூட்டணிக் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். இதற்கு முன்பு, அதாவது 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்தார். ஜெகனின் ஆட்சியில் மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்தக் குழு நடத்திய விசாரணையில் ரூ.3,500 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான முறைகேடு வழக்கில் நீதிமன்றத்தில் 300 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்துள்ளது.
அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான ஊழல் நடைபெற்றது குறித்தும், அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் இடம்பெற்றுள்ளது. முறைகேடு மூலம் ஜெகன் மோகன் ரெட்டி லஞ்சம் பெற்றதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றப்பத்திரிகையில் அவர் குற்றவாளி எனக் குறிப்பிடப்படவில்லை. மேலும், 30க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் இந்த நிதியை மோசடி செய்ததாகவும், துபாய் மற்றும் ஆப்பிரிக்காவில் நிலம், தங்கம், ஆடம்பர சொத்துகளை வாங்குவதற்காக இந்த தொகை முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில், “மதுபான ஊழல் ஒரு புனையப்பட்ட கதை. இது, முக்கியப் பிரச்னைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு வழி. முழு வழக்கும் அழுத்தம், அச்சுறுத்தல்கள், மூன்றாம் நிலை சித்திரவதை மற்றும் லஞ்சம் மற்றும் தூண்டுதல்கள் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட கொள்கையில் குறை கூறப்படுகிறது. இது மக்களுக்காக நிற்பவர்களை வாயடைக்கச் செய்யும் முயற்சி. இன்னும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், YSRCP தலைவர்கள் மீது மதுபான ஊழல் குறித்து பொய்யாக குற்றம் சாட்டும் அதே வேளையில், தற்போதைய TDP தலைமையிலான கூட்டணி, YSRCP அரசாங்கம் அகற்றிய அதே ஊழல் நிறைந்த மதுபான நடைமுறைகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. பெல்ட் கடைகள் மற்றும் அனுமதி அறைகள் என்று பெயரிடப்பட்ட சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்கள் மீண்டும் வந்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் அரசியல் பகையைத் தீர்த்துக்கொள்ள மாநில நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துகிறார். 2014-19 வரையிலான ஆட்சிக் காலத்தில் நடந்த மதுபான ஊழல் உட்பட பல ஊழல் வழக்குகளில் நாயுடு ஜாமீனில் வெளியில் இருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உண்மையான திட்டம் இப்போது தெளிவாகியுள்ளது. விசாரணை என்ற போர்வையில் YSRCP தலைவர்களைக் கைது செய்து, சட்டப்பூர்வ செயல்முறையை இழுத்தடித்து, அவர்களை காலவரையின்றி சிறையில் அடைக்க சிறப்பு விசாரணைக் குழுவைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் உண்மையான விசாரணை தொடங்கியதும், உண்மை வெளிப்படும். இது ஆதாரமற்ற, அரசியல் ரீதியாக உந்தப்பட்ட வழக்கு, முற்றிலும் சட்டப்பூர்வ தகுதியற்றது” எனப் பதிவிட்டுள்ளார்.